குதிரைப் படைகள் நோய்வாய்ப்பட்டும் கிழத்தனமாகியும் இறந்து விட்டன

முதலமைச்சராகப் பதவி ஏற்று ஒவ்வொரு நாளும் மக்களுக்கு என்ன தேவை என்று தெரிந்து நன்மை செய்தார். அரசன் அரிமர்த்தன பாண்டியனுக்குக் கவசமாகவும் விளங்கினான். அப்போது அரிமத்தன பாண்டியனுடைய படையிலே குதிரைப் படைகள் நோய்வாய்ப்பட்டும் கிழத்தனமாகியும் இறந்து விட்டன.

அரசன் மாணிக்கவாசகரை அழைத்து, “முதலமைச்சரே, கருவூலத்தைத் திறந்து செம்பொன்களை எடுத்துக் கொண்டு போய் துறைமுகத்திலே நல்ல குதிரைகள் வரும். வாங்கி வாரும்” என்றான். அவ்வாறே மாணிக்கவாசகர் கருவூலத்தைத் திறந்து பொற்குவியல்களை எடுத்துப் பொதி மாட்டின் மேலேயும் ஒட்டகத்தின் மேலேயும் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.

நேரே ஆலயத்துக்குச் சென்று சொக்கலிங்கப் பெருமானை வணங்கி, மீனாட்சியம்மையாரைத் தொழுதார். அர்ச்சகர் திருநீறு கொண்டு வந்து கொடுத்தார். இது நல்ல சூசகம் என்று எண்ணி இரண்டு கரங்களாலும் வாங்கித் திருநீற்றை இட்டுக் கொண்டார். பிறகு பல்லக்கிலே சென்றார் குதிரைகள் வாங்க. அவருடைய சிந்தையெல்லாம் சிவனிடத்திலே இருந்தது. அவரை ஆட்கொள்ளும் பொருட்டு சிவபெருமான் கைலாசத்தில் இருந்து திருப்பெருந்துறைக்கு குருவடிவாக வந்தார்.

குருந்த மரத்தின் கீழே எழுந்தருளினார். அங்கே சிவகணங்கள் எல்லாம் தவமுனிவர்களாக இருந்தார்கள்.  சிவபெருமானைப் பார்த்த உடனே மாணிக்கவாசகர் தழலிடைப்பட்ட மெழுகு போலே உள்ளம் உருகினார். “ஐயனே” ன்று திருவடியிலே விழுந்தார். ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம, ஓம் சிவாய நம என்கிற சூக்கும பஞ்சாட்சரத்தை உபதேசித்தார்.